Recent Articles

Navigation : Home / , , / Article : அவசரகால சட்டத்தை நீக்குவதற்கு ஜனாதிபதி முடிவு

அவசரகால சட்டத்தை நீக்குவதற்கு ஜனாதிபதி முடிவு


நாட்டின் எதிர்கால நடவடிக்கைகளை ஜனநாயக முறைப்படி சாதாரண சட்டத்தின் கீழேயே முன்னெடுக்க முடியுமென்பதால் அவசரகால சட்டத்தை நீக்கிவிடுவதற்கான யோசனையை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறிவித்தார்.


நாட்டின் நிர்வாகத்துக்கு அவசரகால சட்டத்தின் தேவை இப்போது இல்லையென்று தான் திருப்தி அடைந்துள்ளதாலேயே அவசரகால சட்டத்தை நீடிக்காமலிருக்க தீர்மானித்ததாக மகிந்த ராஜபக்ஷ கூறினார்.
இலங்கையில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகமான அவசரகால சட்டம் ஒவ்வொரு மாதமும் நாடாளுமன்றத்தில் நீடிக்கப்பட்டு வருகின்றது.
2002ம் ஆண்டில் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் எட்டப்பட்ட சமாதான புரிந்துணர்வு உடன்படிக்கை காலத்தில் இந்த சட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தது.
பின்னர் 2005 ஆம் ஆண்டில் இடம்பெற்ற வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலையுடன் சந்திரிகா அரசு மீண்டும் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியது.

இலங்கையில் போர் முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்தும் அவசரகால நிலை நீடிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் சர்வதேச ரீதியிலும் உள்ளூரிலும் மனித உரிமை ஆர்வலர்களால் பெரும் விசனங்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன.
2009ம் ஆண்டில் மே மாதம் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டது முதல் வெறும் கற்பனை கலந்த பீதியாக மாறிப்போயுள்ள அண்மைய க்ரீஸ் பூதங்கள் தவிர வேறு எவ்விதமான பயங்கரவாத நடவடிக்கைகளும் நாட்டில் இடம்பெறவில்லையென்று தான் திருப்தி அடைவதாக மகிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் கூறினார்.

ரணில் நன்றி கூறினார்

இதற்கிடையே, அவசரகால சட்டத்தை நீடிக்காமலிருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அரசியல் ரீதீயான பல பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கு பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கின்றது என்று கூறிய ரணில் விக்ரமசிங்க, இருந்தாலும் அவசரகால நிலையை ரத்து செய்யும் ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு நன்றி கூறுவதாக சபையில் கூறினார்.
எதிரணிக் கட்சிகளும் சிறுபான்மை அரசியல் கட்சிகளும் நாட்டில் போர் முடிந்த சூழ்நிலையில் அவசர கால சட்டத்தை அரசு நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்ததுடன் தேர்தல் காலங்களில் இந்த சட்டத்தைப் பயன்படுத்தியே எதிரணியினரை ஒடுக்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபடுகின்றது என்றும் குற்றஞ்சாட்டின.

இப்போது இலங்கை ஜனாதிபதி அவசர கால நிலையை நீக்குவதற்கு எடுத்துள்ள முடிவு நாட்டு மக்களுக்கு கிடைத்த வெற்றியே என ஒரு காலத்தில் ஜனாதிபதி மகிந்தவுக்கு ஆதரவு தெரிவித்தாலும் இப்போது எதிரணி வரிசையில் இருக்கின்ற ஜேவிபி என்கின்ற மக்கள் விடுதலை முன்னணி கூறியிருக்கின்றது.

செப்டம்பரில் ஐநாவின் மனித உரிமைகள் கூட்டத்தொடர்

இதற்கிடையே, எதிர்வரும் செப்டம்பரில் ஐநாவின் மனித உரிமைகள் தொடர்பான கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்பட இருக்கும் நிலையில் சர்வதேசத்துக்கு காட்டவே இலங்கை இந்த திடீர் அறிவிப்பைச் செய்துள்ளதாக விமர்சகர்கள் கருதுகின்றனர்.
சர்வதேச ரீதியான அழுத்தங்களை சமாளிக்க இலங்கை அரசு இதன்மூலம் முயற்சிப்பதாக இலங்கையில் உள்ள மனித உரிமைகள் சட்டத்தரணி கே.எஸ். ரட்ணவேல் பிபிசியிடம் கூறினார்.

அவசரகால சட்டவிதிகள் நீடிக்கப்படாவிட்டாலும், தற்போதும் அமுலில் இருக்கின்ற பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் புதிய ஒழுங்குவிதிகளைக் கொண்டுவந்து அதன்மூலம் பாதுகாப்பு கெடுபிடிகளை தொடர்ந்தும் வைத்திருப்பதற்கு பாதுகாப்பு அமைச்சருக்கு வசதி இருப்பதாகவும் சட்டத்தரணி ரட்ணவேல் மேலும் சுட்டிக்காட்டினார்.

0 Responses to "அவசரகால சட்டத்தை நீக்குவதற்கு ஜனாதிபதி முடிவு"

Leave a Reply