நாவாந்துறை வாசிகள் 95 பேருக்கும் பிணை
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் நாவாந்துறையில் மர்மமான முறையில் நடமாடியவர்களைத் துரத்திச் சென்ற ஊர் மக்களுக்கும் இராணுவம் மற்றும் பொலிசாருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் பின்னர் படையினரால் கைது செய்யப்பட்ட 95 பேரையும் யாழ் மாவட்ட நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை பிணையில் செல்ல அனுமதித்திருக்கின்றது.
இந்த மோதல்களின் போது பொலிசாரின் வாகனங்கள் சேதமடைந்ததையடுத்து, அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தார்கள் என கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக பொலிசார் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு விசாரணை யாழ் மாவட்ட நீதிபதி அ.பிரேம்சங்கர் முன்னிலையில் நடைபெற்ற போது, கைது செய்யப்பட்டவர்கள் மிகமோசமான காயங்களுக்கு உள்ளாகியிருக்கின்றார்கள். எனவே, அவர்களை பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என சட்டத்தரணி சிறிகாந்தா வாதாடினார்.
ஆயினும் அதற்கு அனுமதிக்கக் கூடாது என விடாப்பிடியாக பொலிசாரும் எதிர்த்து வாதாடினர்.
சம்பவம் நடைபெற்ற இடமான நாவாந்துறைக்குச் சென்ற நீதிபதி அங்கு நிலைமைகளைப் பார்வையிட்டு விசாரணைகளையும் மேற்கொண்டிருந்தார்.
தொடரும் அச்சம்
இதேவேளை, இராணுவத்தினரால் மிக மோசமாக பொதுமக்கள் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்ற நாவாந்துறையில் இன்னும் பதற்றம் தணியவில்லை.
இந்த ஊரைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதனால், இங்குள்ள பெண்கள், பிள்ளைகள் மற்றும் எஞ்சியுள்ள ஆண்களும் இரவுப் பொழுதை நாவாந்துறை தேவாலயத்திலேயே கழிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இங்கு இரவும் பகலும் இராணுவத்தினர் காவல் கடமையில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
