Recent Articles

Navigation : Home / / Article : சிக்கலில் இந்தியாவின் விளையாட்டுச் சட்ட மசோதா

சிக்கலில் இந்தியாவின் விளையாட்டுச் சட்ட மசோதா

Thursday, September 1, 2011 | No Comments | Labels :

இந்தியாவில் அனைத்து விளையாட்டுகளையும் அவற்றை நிர்வகிக்கும் சம்மேளனங்களையும் ஒரு புதிய விளையாட்டு சட்டத்தின் மூலம் அரசு மேற்பார்வை செய்யும் நோக்கில் கொண்டுவரப்பட்ட சட்டவரைவு அமைச்சரவையில் அங்கீகாரம் பெறவில்லை.


விளையாட்டு சம்மேளனங்களின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மையை கொண்டுவரும் நோக்கிலும், நிர்வாகம் சிறப்பான முறையாக நடைபெறுகிறதா என்பதை மேற்பார்வை செய்யும் வகையிலும், இந்தச் சட்டம் முன்னெடுக்கப்பட இருந்தது. உத்தேசிக்கப்பட்ட சட்ட முன்வரைவு 30.8.11 அன்று இந்திய அமைச்சரவை கூட்டத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் அஜய் மாக்கனால் முன்வைக்கப்பட்டது. ஆனால் அமைச்சரவைக்குள்ளேயே எழுந்த கருத்து வேறுபாடுகள் காரணமாக அந்தச் சட்டம் திருத்தப்பட்டு, பின்னர் மீண்டும் அமைச்சரவை கூட்டத்தில் சமர்பிக்கப்படும் என்று முடிவாகியது.

குறிப்பாக கிரிக்கெட் விளையாட்டை இந்தச் சட்டத்தின் கீழும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழும் கொண்டு வருவது குறித்து முரண்பாடுகள் நிலவின. இந்திய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள இந்த சட்ட வரைவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் எழுந்துள்ளன. குறிப்பாக கிரிக்கெட் விளையாட்டை இந்தச் சட்டத்தின் வரைமுறைக்குள் கொண்டுவர வேண்டும் என்று கபில்தேவ், அசாருதீன் போன்ற முன்னாள் தலைவர்கள் கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் கூறுவதற்கு எதிரான கருத்துக்களும் வந்துள்ளன.

 “நிர்வாகத் திறமையின் வெளிப்பாடே வெற்றி்கள்” 

 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் உறுப்பினராக இருந்தவரும், கபில்தேவுடன் பல ஆண்டுகள் இணைந்து விளையாடியவருமான ரோஜர் பின்னி, கிரிக்கெட் விளையாட்டை இந்தச் சட்டத்தினுள் கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை என்று கூறுகிறார்.

இது வரை இந்திய கிரிக்கெட் அணி பெற்றுள்ள வெற்றிகள் மற்றும் நிர்வகிக்கப்பட்டு வந்த விதம் ஆகியவற்றை பார்க்கும் போது அதில் எந்தவிதமான பிரச்சினையும் இருப்பது போலத் தோன்றவில்லை என்றும் ரோஜர் பின்னி தமிழோசையிடம் தெரிவித்தார். நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை என்பது அரசு தலையீடு இல்லாமலும் நடைபெறலாமே என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார் அனைத்து விளையாட்டு சங்கங்களும் அரசின் கட்டுப்பட்டின் கீழ் வரவேண்டும் என்பது சர்வதேச விளையாட்டு நெறிமுறைகளுக்கு எதிரானது என்றும், அப்படியன ஒரு நடவடிக்கையை சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் ஏற்றுக் கொள்ளாது என்றும் கூறுகிறார் ஹிந்து பத்திரிகையின் மூத்த விளையாட்டுச் செய்தியாளர் எஸ்.தியாகரஜன். விளையாட்டு சங்கங்களின் பொறுப்புகளில் இருப்பவர்கள், ஒரு குறிப்பிட்ட வயது மறும் காலத்துக்கு மட்டுமே இருக்க வேண்டும் என்பது சட்டத்தின் முன் செல்லுபடியாகாது என்றும் தியாகராஜன் கூறுகிறார்.


0 Responses to "சிக்கலில் இந்தியாவின் விளையாட்டுச் சட்ட மசோதா"

Leave a Reply