அண்ணா ஹஸாரேவின் உண்ணாவிரதம் முடிகிறது
இந்தியாவில், ஊழலைத் தடுப்பதற்கான முயற்சியாக, வலுவான லோக்பால் மசோதாவைக் கொண்டுவர, சமூக சேவகர் அண்ணா ஹஸாரே தெரிவித்த மூன்று முக்கிய அம்சங்களை ஏற்றுக்கொள்வது குறித்து இன்று சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் ஒருமித்த கருத்து ஏற்பட்டது.
வலுவான லோக்பால் மசோதா கோரி, 12-வது நாளாக அண்ணா ஹஸாரே உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருக்கிறார். இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண, இன்று நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு கூட்டப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக, காலையில், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஓர் அறிக்கை தாக்கல் செய்து, அதனடிப்படையில் உறுப்பினர்கள் விவாதம் நடத்த அழைப்பு விடுத்தார். பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினார்கள்.
இரு அவைகளிலும் நடந்த விவாதம், சற்று நேரத்துக்கு முன்னதாக முடிவுக்கு வந்தது. சிவில் சமூகம் தெரிவித்த கருத்துக்களை உள்ளடக்கி, உறுப்பினர்கள் வலுவான லோக்பால் மசோதாவுக்கு ஆதரவளிக்கும் உணர்வை வெளிப்படுத்தியதாக, கடைசியில் பதிலளித்துப் பேசிய பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். அந்த முடிவை, நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்புவதாகவும் தெரிவித்தார்.
அண்ணா ஹசாரேவின் போராட்டம் முடிவுக்கு வருகிறது
நாடாளுமன்றத்தின் இந்த முடிவை அடுத்து, அண்ணா ஹஸாரே தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார் பிரணாப் முகர்ஜி.
இதனிடையே, நாடாளுமன்றத்தின் முடிவு, உண்ணாவிரதப் பந்தலில் இருந்த அண்ணா ஹஸாரேவுக்குத் தெரிவிக்கப்பட்டது. மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக், நாடாளுமன்ற தீர்மானத்தையும், அண்ணாவுக்கு பிரதமர் எழுதிய கடிதத்தையும் நேரடியாக வழங்கினார்.
அதைத் தொடர்ந்து, அந்த முடிவை ஏற்றுக்கொள்வதாகவும், நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்வதாகவும் அண்ணா ஹஸாரே அறிவித்தார். அதே நேரத்தில், ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் பாதி வெற்றியைத்தான் ஈட்டியிருப்பதாகவும் அண்ணா ஹஸாரே கருத்து வெளியி்ட்டார்.
இந்தப் போராட்டத்தில் அண்ணாவுக்குக் கிடைத்த வெற்றியை, அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கோஷமிட்டு வரவேற்றார்கள்.
இந்தப் பிரச்சினை முடிவுக்கு வருவதற்கு முன்னதாக, இன்று பிற்பகல் வரை அரசுக்கும் அண்ணா ஹஸாரே குழுவினருக்கும் இடையே பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அண்ணா தெரிவித்த மூன்று அம்சங்கள் தொடர்பாக, விவாதத்துக்குப் பிறகு வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் அரசிடம் பேச்சு நடத்தும்போது நிபந்தனை விதித்தார்கள்.
