அமெரிக்காவில் புகையிலை நிறுவனங்கள் வழக்கு
அமெரிக்காவில் புகையிலை நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிராக அந்நிறுவனங்கள் வழக்கு தொடுத்துள்ளன.
சிகரெட் நிறுவனங்கள் தமது உற்பத்திப் பொருட்களின் அட்டைகளில் புகைப்பழக்கத்தின் ஆபத்து குறித்த எச்சரிக்கைகளை வரைபடமாக வெளியிட வேண்டும் என்று வற்புறுத்தும் சுகாதார விழிப்புணர்வு விதிகள் அமலுக்கு வரவுள்ளன.
இந்த விதிகளை எதிர்த்து அந்நாட்டின் நான்கு சிகரெட் நிறுவனங்கள் அரசாங்கத்துக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளன.
அடுத்த வருடத்தின் பிற்பாதியில் இருந்து அமெரிக்காவில் விற்கப்படுகின்ற புகையிலை உற்பத்திப் பொருட்களில், புகைப்பழக்கம் உள்ளவர்கள் அப்பழக்கத்தைக் கைவிடத் தூண்டும் வகையான எச்சரிக்கைப் படங்கள் இடம்பெற வேண்டும் என அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு விதிகளை வகுத்துள்ளது.
புதிய விதிமுறைகள் தமது பேச்சுரிமையை மீறுவதாக வாதிடக்கூடிய வழக்கு ஒன்றை அமெரிக்காவின் தேசிய நீதிமன்றத்தில் புகையிலை நிறுவனங்கள் தொடுத்துள்ளன.
வர்த்தக ரீதியில் செயல்படுவதற்கு தமக்குள்ள உரிமையை இந்த புதிய விதிமுறைகள் தடுக்கின்றன - புகைப்பழக்கத்துக்கு எதிரான அரசாங்கத்தின் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்படுகின்ற ஒரு சின்ன விளம்பர அட்டையாக சிகரெட் அட்டைகள் மாற வேண்டும் என அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்று சிகரெட் நிறுவனங்கள் குற்றம்சாட்டுகின்றன.
ஒருவரை புகைப்பழக்கத்துக்கு அஞ்சச்செய்ய வேண்டும் என்ற நோக்கத்துக்காக போட்டவை மாதிரியான படங்கள் இவை.
புகைப்பழக்கத்தால் நோய்வாய்ப்பட்டு இறந்தவர் ஒருவரின் சடலம், புகைப்பழக்கத்தால் அரித்துப்போன பல்வரிசை போன்ற படங்களும் இவற்றில் அடங்கும்.
இந்த புதிய விதிகளை அரசியல் சட்டத்துக்கு முரணானது என நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என சிகரெட் நிறுவனங்களின் சட்டத்தரணிகள் விரும்புகின்றனர்.
ஆனால் அரசாங்கத்தில் உள்ளவர்களும், புகைப்பழக்கத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்பவர்களும் இந்த புதிய விதிமுறைகளை வரவேற்கிறார்கள்.
கெண்டக்கி மாகாணத்தின் மாவட்ட நீதிமன்றம் ஒன்றில் இதே பாணியில் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கு தள்ளுபடி ஆகியிருந்ததை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
